ஈரானை எதிர்க்கும் வல்லமை இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி
ஈரான் அணு சக்தி முயற்சி அபாயம் விளைவிக்கும் என கருதினால் அதிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை தமக்கு இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டார்.
அத்துடன் ஈரானை எதிர்க்கும் வல்லமை தமக்கு இருப்பதாக அவர் எச்சரித்தார்.
அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்ட பென்ஜமின் நெதன்யாகு, அமெரிக்க இஸ்ரேல் பொது விவகார குழுமுன் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இஸ்ரேல் அரசுக்கு ஆதரவளிக்கும் இந்த குழு அமெரிக்காவில் சக்தி வாய்ந்த அமைப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து விட்டு வொஷிங்டனில் நெதன்யா நேற்று முன்தினம் இரவு மேற்படி குழு முன் உரையாற்றியமை விசேட அம்சமாகும். ‘இஸ்ரேலுக்கு தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் இருக்கிறது’ என்று கூறிய நெதன்யாகு, பேச்சுவார்த் தைக்கான அனைத்து முயற்சிகளையும் நாம் செய்கிறோம்.
ஆனால் இதனை தொடர்ந்து செய்ய முடியாது என்றார். யூத அரசை அழிக்க முயற்சிப்பதை இடமளிக்க முடியாது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பது கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க இஸ்ரேல் பொது விவகார குழு முன் பராக் ஒபாமா உரையாற்றி இருந்தார்.
அதில் ஈரான் தனது அணு சோதனை விடயத்தில் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. எதற்கும் ஒரு எல்லை உண்டு. தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து யோசிக்கலாம். அது வரை தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஈரானுக்கு இன்னும் வாய்ப்பு காத்திருக்கிறது என்றார்.
இதேவேளை இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் ஈரான் அணு ஆயுத விவகாரம் முக்கிய இடம்பிடித்துள்ளது. எனினும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் தொடுத்த எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நெதன்யாகு ஒபாமாவிடம் உறுதியளித்துள்ளார்.
இதில் ஈரான் விடயத்தில் இரு தரப்பும் நெருங்கிச் செயற்பட இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிய வருகிறது.
பராக் ஒபாமா மற்றும் நெதன்யாகுவுக்கு இடையில் மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையிலேயே இருவரும் சந்தித்துக் கொண்டனர். கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ‘ஜி 20’ கூட்டத்தின் போது ஒபாமாவுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசிக்கும் இடையிலான சம்பாஷனை ஊடகங்களில் வெளியா னதைத் தொடர்ந்து ஒபாமா, நெதன்யாகுவுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
ஒபாமாவுடனான தனிப்பட்ட பேச்சுவார்த்தை ஒன்றில் சர்கோசி நெதன்யாகுவை பொய்யர் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஒபாமா, “நீங்கள் அவர் மீது வெறுப்பில் இருக்கிaர். ஆனால் நான் அவருடன் ஒவ்வொரு நாளும் இணைந்து செயற்பட வேண்டி இருக்கிறது” என்றார்.
அமெரிக்காவில் தேர்தல் நெருங்கியுள்ள தறுவாயிலேயே ஈரான் அணு சக்தி விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஈரான் தொடர்பில் ஒபாமாவின் அணுகுமுறைக்கு அவரை எதிர்த்து போட்டியிட எதிர்பார்த்திருக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதில் குடியரசு கட்சியின் முன்னணி போட்டியாளர் மிட் ரொம்னி, ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானால் ஈரான் அணு ஆயுத நாடாக உருவாகும் என தனது பிரசார கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான முன்னணி போட்டியாளர்களான ரொம்னி, நியுட் கின்சிரிச், மற்றும் ரிக்கி ஸன்டோர்ம் அமெரிக்க இஸ்ரேல் பொது விவகார குழு முன் உரையாற்றவுள் ளனர்.





