இஸ்லாமிய
வாழ்வில் குடும்பமே அடித்தளமாகும். அதன் பலம், சமூகத்தின் பலம். அதன்
பலவீனமே சமூகத்தின் பலவீனம். இஸ்லாம் குடும்பத்தை எதிர்கால சந்ததியை
உருவாக்கும் அடிப்படைத் நிறுவனமாகப் பார்க்கிறது. இந்தவகையில் அதனை
சட்டங்களாலும், உபதேசங்களாலும், பல்வகைப் போதனை களாலும் பலப்படுத்திக்
கட்டமைக்கிறது. இந்த வகையில் ஒவ் வொரு முஸ்லிமும் இப் பகுதியில் ஆழ்ந்து
கவனம் செலுத்தல் அவனது கடமையும், பொறுப்புமாகும். அதற்கான ஓரளவு விரிந்த
விளக்கத்தைத் தருவதே இச் சிறு நூலின் நோக்கமாகும்.
அல் குர்ஆன் குடும்ப வாழ்வுக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. அக்கருத்தை கீழ்வருமாறு விளக்கலாம்.
1.
குடும்பத்தோடு சம்பந்தப்பட்ட சட்டங்கள் அல் குர்ஆனில் மிக விரிவாக நன்கு
தெளிவுபடுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் திருமணம் முடித்தல்,
விவாகரத்து, வாரிசுரிமை போன்றவற்றோடு சம்பந்தப்பட்ட சட்டங்களனைத்தும் விபர
மாக தரப்பட்டுள்ளன.
கால, சமூக
நிலைமைகளுக்கேற்ப மாறக்கூடிய பகுதிகளைப் பொறுத்தவரையில் அல் குர்ஆனில்
விபரமாகவும், விளக்க மாகவும் தரமாட்டாது. சுருக்கமாகவும் கொள்கைகளாகவும்,
விதிகளாகவுமே அவற்றைத் தரும். பணக்கொடுக்கல் வாங்கல், ஆட்சி ஒழுங்குகள்
பற்றிய சட்டங்கள் இதற்கு உதாரணங் களாகும்.
கால, இட, சமூக நிலைமைகளுக்கேற்ப மாறாத சட்டங்களைப் பொறுத்தவரை அல்குர்ஆன்
அவற்றை விபரமாகவும், விரிவாகவும், மிகத் தெளிவாகவுமே தரும். நம்பிக்கையோடு
சார்ந்த பகுதிகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
குடும்ப வாழ்வுக்கான சட்ட திட்டங்களில் அல்குர்ஆன் எவ்வளவு ஆழ்ந்து கவனம்
செலுத்துகின்றது என்பது இதிலி ருந்து தெளிவாகின்றது. குடும்ப வாழ்வோடு
சம்பந்தப்பட்ட சட்டங்கள் மாறாது நிலைத்து நிற்க வேண்டும் என்பது அல்
குர்ஆனின் கருத்து என்பதனை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.
2.
குடும்ப சட்டங்களை நம்பிக்கை பகுதிகளோடு இணைத்து அல்குர்ஆன் பேசுவதை
அவதானிக்க முடியும். இது குடும்ப சட்டங்களின் உயர்வையும்,
புனிதத்தன்மையையும் காட்டு வதோடு அது மிகப் பெரும் கடமை என்பதையும்
உணர்த்து கிறது.
உதாரணம்: “ஆனால் நன்மை
என்னவெனில் அல்லாஹ்வை யும், இறுதி நாளையும், மலக்குகளையும், வேதத்தையும்,
நபிமார்களையும், ஒருவர் ஈமான் கொண்டு செல்வத்தை அதன்மீது பற்றிருந்த போதும்
உறவினருக்கும், அநாதைகளுக்கும் கொடுப்பதாகும். (ஸூறா அல் பகரா 177)
“மறுமை நாளைப் பொய்ப்படுத்துபவரை நீர் அவதானித்தீரா? அவன்தான் அநாதையைக் கொடுமைப்படுத்துகிறான்.” (ஸூரா மாஊன்)
“உமது இரட்சகன் அவைனையன்றி யாரையும் வணங்கக் கூடாதென்றும் பெற்றோர்களுடன்
நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமெனவும் விதியாக்கினான்.” (இஸ்ரா-23)
3.
அல்குர்ஆன் குடும்பத்தை அல்லாஹ்வின் அத்தாட்சி என வர்ணிக்கிறது. “நீங்கள்
அமைதி பெற வேண்டும் என்பதற்காக உங்களிலிருந்து உங்களது சோடியைப்
படைத்துள்ளமை அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும்.” (ஸூரா ரூம்-21)
அல்குர்ஆன்
குடும்ப வாழ்வுக்கு இவ்வளவு பாரிய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது எனின்
சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும்போது அதன் முக்கியத்துவம் மேலும்
கூடுகிறது. ஏனெனில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் சிந்தனை மற்றும்
கலாச்சார பாதிப்புக்கு உட்படுவர். அத்தோடு இஸ்லாமிய வாழ் வமைப்பும்,
இஸ்லாமிய சிந்தனையை ஆழ்ந்து படிப்பதற்கான வாய்ப்பும், வசதிகளும்
இந்நிலையில் மிகக் குறைவாகவே இருக்கும். இத்தகைய சூழலில் முஸ்லிம்களை ஆளுமை
சிதைவடையாது காக்கும் முதன்மையான முதல் நிறுவனம் குடும்பம் என்பதில்
சந்தேகமில்லை.
இப்பின்னணியில் முஸ்லிம்கள் குடும்ப
அமைப்பையும், அதன் கட்டமைப்பையும் வளர்ப்பதிலும்,காப்பதிலும் அவர்கள் சிறு
பான்மையாக வாழும் நிலையில் அதிகூடிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதற்கான வேலைத்திட்டங்கள் நிறுவன ஒழுங்குகள் அவர்களிடம் பலம் பெற்றுக்
காணப்படுவது அவசியம். சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் ஓரளவு முழுமை
யான முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் உள்ளது இந்தக் குடும்ப அமைப்பு மட்டுமே
என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய தொரு விடயமாகும்.
எமது சமூக வாழ்வில் குடும்பம்
உண்மை
மேலே விவரித்த வகையில் இருந்தாலும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் குடும்ப
வாழ்வு என்பது படிப்படியாகச் சிதைவுற்று செல்வதனை அதவதானிக்க முடிகிறது.
அதைப்பற்றிய துல்லியமான முறையான கணிப்பீடுகள் எதுவும் காணப்படா விட்டாலும்
முஸ்லிம் சமூகத்தின் பேசு பொருளாக அது மாறியுள்ளது உண்மை. காழி
நீதிமன்றங்களை அணுகி விசாரிக்கும் போதும் சமூக உழைப்புக்கான தனி மனிதர்கள்,
அமைப்புக்கள், இயக்கங் களை அணுகி விசாரிக்கும் போதும் இந்நிலைமை மிகத்
தெளிவாக தெரிகிறது, உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு சிதைவுற்று வரும்
அமைப்பை கீழ்வருமாறு பிரித்து விளக்கலாம்.
1.
விவாகரத்து மிக அதிகரித்துள்ளமை: நகரம், கிராமம் எனப்பாராது இலங்கையின்
எல்லாப் பகுதிகளிலும் இது அதிகரித்துள்ளமை அவதானிக்கப்படுகிறது.
விவாகரத்தில போய் முடியாத குடும்பங்களில் கூட சுமுகமான உறவின்மை மிகப்
பரவலாக அவதானிக்கப்படும் உண்மை.
2. பிற
சமூகத்தவரைத் திருமணம் முடித்தல் குறிப்பாக சிங்கள இளைஞர்களைத் திருமணம்
முடித்தல் படிப்படியாக கூடி வருகிறது. பல கிராமங்கள், பிரதேசங்களில் இது
பிரச்சினை யாகப் போய் அது பற்றிய கலந்துரையாடல்களும், கூட்டங்களும்
நடந்துள்ளன. ஆயினும் இன்னும் பல பகுதிகளில் இப் பிரச்சினை கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டுவரப்படவில்லை என்பதோடு இதற்கான சரியான தீர்வுகளும்
முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே உண்மையாகும்.
3.
இரத்தஉறவு முறையாகப் பேணப்படாமை, மிக நெருங்கிய உறவினர்களுக்கு
மத்தியிலேயே கடும் பிரச்சினைகள் காணப்படு வதையும் உறவுகள் முழுமையாக
முறிந்து போயுள்ளமையும் அவதானிக்கத்தக்கது. உறவு முறிவோ கோபதாபமோ இல்லாத
போதும் நெருங்கிய உறவுகளற்று தொடர்பற்று வாழும் நிலை மையை பரவலாக அவதானிக்க
முடியும்.
இப்பகுதியில் மாமி-மருமகள், மைனி-மைனி
ஒட்டுறவாட முடி யாமையும் அதனால் கணவன் மனைவி தொடர்பிலோ அல்லது இரத்த உறவு
தொடர்பிலோ கடும் விரிசல் உருவாவதும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மிகவும்
பரவலாக அவதானிக் கப்படும் விடயமாகும்.
4. பிள்ளை வளர்ப்பு
முஸ்லிம் இளைஞர்களுக்கு மத்தியில் காணப்படும் குற்றச் செயல்கள், அறிவு
தேடும் ஆர்வமின்மை, இஸ்லாமிய வாழ்வி லிருந்து தூரமாக இருத்தல் என்பதற்கான
முதன்மையான காரணம் பிள்ளை வளர்ப்பு முறையாக இன்மையே எனின் அது மிகையாகக்
கூறியதாகாது.
5. திருமணம் முடித்தலில் காணப்படும் தவறுகள்
கணவன், மனைவி தெரிவில் பெரும்பாலும் பணமும் அந்தஸ்துமே மிக முதன்மையான
இடத்தைப் பெறுகிறது. உடலியல் ஒருமைப்பாடு, மன, அறிவுத்தர பொருத்தப்பாடு
என்பன இங்கு இரண்டாம் இடத்தையே பெறுகிறது. மார்க்க அறிவு, பக்குவமான நடத்தை
என்பனவும் இங்கு முதன்மையான இடத்தைப் பெறுவதில்லை. இன்னொரு பக்கத்தால்
திருமணம் முடித்தல் என்பது மிகக் கடினமான ஒரு விடயமாக மாறிப் போகியுள்ளது.
சீதனம் என்ற பெயரில் பெண்ணிடமிருந்து பெறப்படும் கைக்கூலி, திருமணத்திற்கான
செலவினம் என இலட்சக்கணக்கில் செலவிடல் என்பன வயது போயும் திரு மணம்
முடிக்காத பல பெண்களை உருவாக்கியுள்ளது. இது பல வகைத் தீமைகளுக்கு இட்டுச்
செல்லும் என்பதில் சந்தேக மில்லை.
இவையே இலங்கை
முஸ்லிம்களின் குடும்பவாழ்வில் காணப்படும் அடிப்படையான பிரச்சினைகள். இவையே
குடும்ப வாழ்வை அரித்து வரும் நோயாக மாறிப்போயுள்ளது. சரியானதொரு
கணக்கெடுப்பு இப்பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுமானால்
பிரச்சினையின் பாரதூரத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எனினும்
இப்பிரச்சினைகள் காணப் படுவது உண்மை. அவை பாரதூரமாக காணப்படுகிறது
என்பதுவும் யதார்த்தம். எனவே இப்பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகாண
முடியும் என சிந்திப்பது மிக அடிப்படையானது. அது பற்றிய சில
அபிப்பிராயங்களையே அடுத்து விளக்க முயல்கிறோம். ஒவ்வொரு பிரச்சினையாக
எடுத்து நாம் இங்கே விளக்கவில்லை. சில பொதுவான தீர்வுகளையே இங்கு நாம்
முன்வைத்திருக்கிறோம். அது எமது புத்திஜீவிகளின் கவனயீர்ப்பை பெற வேண்டுமென
பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
குடும்பம் சீரமைவதற்கான தீர்வுகள்
குடும்பவாழ்வின்
சீர்குலைவை சீர்படுத்தவும், குடும்பத்தைப் பலப்படுத்தவும் இங்கு சில
தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை ஓரளவு விளக்கமாகச் சொல்ல இங்கு
முயற்ச்சிக் கப்படுகின்றது.
இஸ்லாம் முழுமையாக இயங்கல்
இஸ்லாம்
ஒரு சம்பூரண வாழ்க்கைத்திட்டம். அது பூரணமாக நடைமுறைப்படுத்தப்படும்
போதுதான் உரிய பயனைக் கொடுக் கும். முஸ்லிம் அல்லாத சமூகத்தில் ஒரு பகுதியை
மட்டும் நடைமுறைப்படுத்தும் போது அது போதிய உரிய பயனைக் கொடுக் காது.
அதாவது இஸ்லாத்தின் எல்லாப் பகுதிகளும் சேர்ந்தியங்க வேண்டும். ஒன்றோ
இரண்டோ இயங்க ஏனைய பகுதிகள் அறுந்து காணப்பட்டால் இஸ்லாம் பயன் கொடுப்பது
சாத்தியமில்லை.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தால் இஸ்லாத்தை மிகப்
பூரணமாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பது உண்மையே. எனினும்
இஸ்லாத்தின் பெரும்பகுதியொன்றை எம்மால் நடைமுறைப்படுத்த முடியும். தனியார்
சட்டப்பகுதியை முழுமை யாக எம்மால் நடைமுறைப்படுத்த முடியும். ஓரளவு
அதிகாரம் கொண்ட நீதிமன்றம் இப்போது காணப்படுகின்றது. அதனை அரசியல்ரீதியான
செயற்பாடுகள் ஊடாக ஓரளவு முழுமைப் படுத்திக் கொள்வது சாத்தியம்.
பொருளாதாரப்
பகுதியில் 3 பகுதிகளை முழுமையாக நடைமுறைப் படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்
மீதும் செலவழித்தல் கடமை யாகும் பகுதி, இரண்டாவது ஸகாத் நிறுவன அமைப்பு,
மூன்றாவது வாரிசுரிமைச் சட்டப் பகுதி. இவற்றோடு இணைந்து பலவகையான தான
தர்மங்கள் ஊக்குவிக்கப்படும் போது பொருளாதாரப் பகுதி பலம் பெற்றமையும்
அவற்றில் குறிப்பாக ‘வக்பு’ என்ற ஸதகா ஒழுங்கு உயிர் பெறல் மிகப் பெரிய
பயனைக் கொடுக்கும். திருமணத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இடையே நெருங்கிய
உறவுண்டு. பொருளாதாரரீதியாக குடும்பம் பலம் பெறும் போது அது திருமணத்தின்
முன்னே எழும் பொருளாதாரத் தடைகளை நீக்கும். திருமணம் முடித்து வாழ்வைக்
கொண்டு செல்ல முடியாதோருக்கு சீதனம் வாங்கும் நிலையை ஏற்படுத்தாது. வேறு
வகையான பொருளாதார உதவிகளைப் பெரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும். இந்த
வகையில் சீதனப் பழக்கத்தை ஓரளவு மட்டுப் படுத்த இது உதவும்.
சட்டங்கள்
நடைமுறையாவதில் அதிகாரத்திற்கு ஒரு பங்குள்ளது என்பதில் சந்தேகமில்லை.
இங்கு அது காழி நீதி மன்றங்கள் எனக் குறிப்பிட்டோம். அவை பூரண அதிகாரம்
கொண்ட நீதிமன்றங்களாக மாறும்போது குடும்பத்தைக் காப்பதில் ஒரு நல்ல
பங்களிப்பை அதனால் செய்ய முடியும். அத்தோடு கட்டுக்கோப்பான கிராமிய
சமூகக்கட்டமைப்பைக் கொண்டமையும் பொதுசன அபிப்பிராயம் என்ற அதிகாரமும் ஒரு
சிறந்த பங்களிப்பைக் கொடுக்க முடியும்.
முஸ்லிம் சமூகத்தின்
மிக முக்கியமான அடிப்படையும், இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையாவதில் பெரும்
பங்களிப்பு செய்வதும் ஆன்மீக அடிப்படையாகும். இறைதிருப்தி, இறைபயம், இறை
யன்பு என்பன உள்ளங்களில் நன்கு திட்டமிட்டு வளர்க்கப்படும் போது இஸ்லாமிய
சட்டங்கள் இலகுவாக நடைமுறையாகும். இப்பின்னணியிற்தான் அல்குர்ஆனின்
சட்டவசனங்களோடு இறை பயம் பற்றி வலியுறுத்தும் வசனங்களை நிறையவே காண்கிறோம்.
குறிப்பாக குடும்பவாழ்வோடு சம்பந்தப்படும் சட்டவசனங்கள் வரும் போதும்
இதனை அவதானிக்க முடிகிறது. உதராணத்திற்கு கீழ் வரும் வசனங்கள்
தரப்படுகின்றன.
இணைவைப்பவர்களான பெண்களையோ, ஆண்களையோ திருமணம் முடிக்க வேண்டாமென கூற வரும் வசனங்கள் கீழ் வருமாறு அமைகின்றன.
“இறை
நம்பிக்கை கொண்டவர்களாக ஆகும் வரை இணைவைப் பாளர்களான பெண்களை
மணக்காதீர்கள். உங்களுக்குத் கவர்ச்சியாக தெரிந்தாலும் இணைவைப்பில்
ஈடுபடும் பெண்னை விட நிச்சயமாக ஒரு முஃமினான அடிமைப் பெண் சிறந்தவள்.”
“இணைவைப்பாளனான
ஆணுக்கு அவன் இறை நம்பிக்கையாள னாக ஆகும் வரை மணமுடித்துக்
கொடுக்காதீர்கள். உங்களுக்கு கவர்ச்சியாக தெரிந்தாலும் இணைவைப்பாளனை விட
நிச்சயமாக ஒரு முஃமினான அடிமை சிறந்தவன். அவர்கள் நரகின் பக்கம்
அழைக்கிறார்கள் அல்லாஹ்வோ தன் உத்தரவின் மூலம் சுவர்க்கம் நோக்கியும்
பாவமன்னிப்பு நோக்கியும் அழைக்கிறான்.” (ஸூரா அல்-பகரா 221)
பகராவின்
225 வசனம் முதல் விவாக முறிவு சமபந்தமாக விளக்கி வந்துவிட்டு 230 ஆம்
வசனத்தை முடிக்கும் அல்குர்ஆன் கீழ்வரு மாறு கூறுகிறது.
“அவை அல்லாஹ்வின் வரையறைகள் அறிவுள்ளோருக்காக அவற்றை அல்லாஹ் விளக்கியிருக்கிறான்.”
அதற்கடுத்த
231வது வசனத்தில் விவாகரத்து செய்துவிட்டு அதனூ டாக மனைவிக்கு
தீங்கேற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது எனக் கூறிவிட்டுக் கீழ்
வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.
“யார் அவ்வாறு செய்கிறாரோ அவர்
தனக்குத்தானே அநியாயம் செய்துகொள்கிறார். அல்லாஹ்வின் வசனங்களை விளையாட்டாக
எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருளை யும்,
இறக்கிவைத்துள்ள வேதத்தையும், ஞானத்தையும் நினைவு கூறுங்கள். இதனை அவன்
உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ் வைப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ்
அனைத்தையும் நன்கறிந் தவன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.”
குடும்ப
உறவோடு சம்பந்தப்பட்ட பல சட்டங்களை ஸூரா நிஸா சொல்கிறது. அதனை ஆரம்பித்து
வைக்கும் முதலாவது வசனத்தின் இறுதிப்பகுதி கீழ்வருமாறு:
“நீங்கள் எந்த அல்லாஹ்வை வைத்து உங்கள் விவகாரங்களைப் பேசுகின்றீர்களோ அந்த அல்லாஹ்வையும், இரத்த உறவுகளையும் பயந்து கொள்ளுங்கள்.”
இங்கு
இறை பயத்தையும், இரத்த உறவினர் விடயத்தில் பயந்து நடந்துகொள்ளலையும்
ஒன்றாகச் சொல்லும் அல்குர்ஆனின் பிரயோகம் அவதானிக்கத்தக்கது.
இதே
ஸூராவின் 11,12ம் வசனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் பற்றி விளக்கமாகச்
சொல்கிறது. 13, 14ம் வசனங்கள் அவை அல்லாஹ் வின் வரையரைகள் என ஆரம்பித்து
அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படல் சுவர்க்கம் செல்லக்
காரணமாகும் எனக் கூறிவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் யார் மாறு
செய்து அவனது வரையறைகளையும் மீறுகிறாரோ அவர் நிரந்தரமாக நரகில் நுழையச்
செய்யப்படுவார் என விளக்குகிறது.
இவ்வாறு அல்குர்ஆன் முழுவதிலும்
குடும்ப வாழ்வின் சட்ட திட்டங்களை விளக்கும்போது இப்போக்கை அவதானிக்க
முடியும். ஸூரா தலாக்கில் திரும்பத் திரும்ப ஒவ்வொரு சட்டத்தைச் சொன்னதன்
பின்னரும், இறைபயம் பற்றியும் அல்லாஹ் தரும் கூலி பற்றியும் விளக்குவதை
அவதானிக்கலாம். 12 நீண்ட வசனங்களைக் கொண்ட அந்த ஸூராவில் விவாகரத்தோடு
சம்பந்தப்படும் 5 வசனங்கள் மட்டுமே உள்ளன. அந்த சட்டங்களை விட உபதேசங் கள்
அங்கு அதிகம்.
இதனூடாக அல்குர்ஆன் ஆன்மீகரீதியாக
பக்குவப்படலை மிக வலியுறுத்துகிறது என்ற கருத்து பெறப்படுகின்றது.
இஸ்லாத்தில் நம்பிக்கைப் பகுதியும் வணக்கவழிபாடுகள் பகுதியும் பற்றிய நல்ல
அறிவுத் தெளிவோடு மக்கள் அப்பகுதியில் மிகவும் கவனமாக பயிற்றுவிக்கப்பட
வேண்டும் என்பதே இதன் பொருளாகும். அத்தோடு இஸ்லாம் வணக்க வழிபாட்டோடு
நின்றுவிடும் மார்க்க மல்ல வாழ்வின் எல்லாப்பகுதிக்கும் அது
வழிகாட்டுகிறது. ஈமான் என்பது வாழ்வின் எல்லாப் பகுதியிலும் ஊடுருவி
நிற்கிறது என்ற உண்மையும் மிக நன்றாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான
பயிற்சிக்கான பாடத்திட்டம், நிறுவன ஒழுங்குகள் முஸ்லிம் சமூகத்தில் மிகச்
சரியாக உருவாக்கப்படுவதன் அவசியத் தையும், இருக்கும் நிறுவனங்களில்
காணப்படும் குறைபாடுகளை நீக்கி பலப்படுத்துவதன் அவசியத்தையும் இது வேண்டி
நிற்கிறது.
தெரிவின் போது மார்க்க உணர்வு, நடத்தையை விட ஏனைய
வற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்தல், சீதனப் பிரச்சினை, பெரும் செலவோடு
திருமண வைபவத்தை நடாத்தல் போன்ற திருமணத் தில் காணப்படும் முக்கியமான
பிரச்சினைகளுக்கு முதல் தீர்வு இதுவே.
சீதனப் பிரச்சினைக்கு
பொருளாதார வசதியின்மை மட்டும் காரண மல்ல. டாக்டர், வழக்கறிஞர், பெரும்
பணக்காரன் போன்ற வசதியுள்ளவனே சீதனத்தையும அதிகமாகக் கேட்கிறான். எனவே
தீர்வு திருமணம் முடிப்பவர்களுக்கான பொருளாதார உதவி செய்வது மட்டுமல்ல,
அத்தோடு சீதனம் ஹறாம் என்பதுவும் பரவலாகத் தெரிந்திருக்கிறது. இங்குள்ள
அடிப்படைக் குறைபாடு இறைபயம் இன்மை, மறுமை நாள் பற்றிய அச்சமின்மையே.
தெரிவின் போது ஏற்படும் தவறு, ஆடம்பரக் கல்யாணம் என்ற பிழைகளும் இதே
வகையானதுதான். அந்நிய சமுதாயத்தினரைத் திருமணம் முடிப்பதற்கான தீர்வும்
இதுவே. இறைபயமும் மறுமையைப் பற்றி நம்பிக்கையும் உறுதியாக இருக்கும் யாரும்
இறை நிராகரிப்போடு உறவாடச் செல்ல மாட்டான். ஒரே கட்டிலில் எவ்வாறு ஈமானும்
குப்ரும் இணைந்திருக்க முடியும். எனவே இங்குள்ள முதல் பிரச்சினை ஈமானியப்
பலவீனமே.
குடும்ப வாழ்வோடு சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி அறிவு பெறல்
குடும்பம்,
திருமண வாழ்வோடு சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள் ஓரளவு விரிவானவை.
தொழுகையோடு சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள் சமூகத்தில் எல்லோருக்கும்
கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. பல நூல்கள், கையேடுகள், இயக்கங்கள்
தமது அங்கத்தவர்களுக்கும், பொதுவாகவும் விளக்கும் வகையிலான
நிகழ்ச்சித்திட்டங்கள் என அது பரவலாக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணமும்
குடும்ப வாழ்வும் தனிப்பட்ட ஒவ்வொரு மனித னோடும் சம்பந்தப்படும் விடயம்.
எனவே அதன் சட்டங்களை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அந்தவகையில் மிக இலகு
படுத்தப்பட்டு சமூகத்தில் எல்லோருக்கும் செல்லும் வகையில் அது
பரவலாக்கப்பட வேண்டும். ஆனால் சமூகத்தில் அந்நிலைமை காணப்படவில்லை.
சமூகத்தில் பரவலாக தொழுதல், நோன்பு பிடித் தலின் பொதுவான சட்டங்கள்
தெரியும். அவ்வாறான நிலையே இங்கும் காணப்பட வேண்டும். ஆனால் யாரும் அதில்
பெரிய கரிசனை எடுப்பதாகத் தெரியவில்லை. குறிப்பிடப்பட்ட விடயத்தின்
பாரதூரம் கருதி கீழே குடும்ப சட்டங்கள் அடங்கும் விடய தானங்களைத் தந்து
இப்பிரச்சினையை விளங்க சில உதாரணங் களையும் தருகிறோம்.
1. திருமண ஒப்பந்தம்
1. அடிப்படைக் கொள்கைகள்.
2. திருமணம் பேசல், சட்டங்களும் விளைவுகளும்.
3. திருமணமும் அதன் விளைவுகளும்
2. விவாக முறிவு
1. விவாக முறிவுக்கான அடிப்படைக் கொள்கைகள்
2. விவாகரத்துக்கான ஷர்த்துகள்.
3. விவாக முறிவில் பெண்ணின் பங்கு
4. விவாக முறிவில் நீதிமன்றத்தின் பங்கு
3. தாய், தந்தையர், பிள்ளைகளது உரிமைகளும்,
கடமைகளும்
1. வயிற்றிலுள்ள சிசுவைப் பாதுகாத்தலும், பராமரித்தலும்.
2. பிறந்ததன் பின்னர் பிள்ளையின் உரிமைகள்.
4. உறவினர்களது உரிமைகள்.
1.செலவழித்தலுக்கு கடமையாதல் பற்றிய பொதுக் கொள்கைகள்.
2. செலவழித்தல் சட்டங்கள்.
5. வாரிசுரிமை
6. வஸிய்யத் செய்தல்
இவையே
திருமணம், குடும்பவாழ்வு சம்பந்தமாக இஸ்லாம் சட்ட மாக்கியுள்ள தலைப்புகள்.
இவை பற்றிய அறிவு முஸ்லிம் சமூக அங்கத்தவர்களுக்கு மத்தியில் மிகவும்
குறைவாகவே உள்ளது. அது வும் குடும்ப வாழ்வின் சிதைவுக்கு இன்னுமொரு முக்கிய
காரணம். இங்கு சில உதாரணங்களைத் தருவோம்.
விவாகரத்து ஹராமான
ஒன்றல்ல. வாழ்க்கை மிகவும் சிக்கலாகி விடும்போது அது அனுமதிக்கப்படுகிறது.
எனினும் மீள் பரிசீலனை செய்ய மீள்அழைக்கும் தலாக் என்ற ஒரு சட்ட ஒழுங்கை
இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. அதற்கான கால இடைவெளிகளையும் ஆக்கி ஒரே முறையில்
3 தலாக்கையும் சொல்லக் கூடாதெனவும் ஆக்கியுள்ளது. முதல், இரண்டாம் முறை
தலாக்குகளின் போது கணவனின் வீட்டைவிட்டு மனைவி வெளியேறக் கூடாது எனவும்
விளக்கியுள்ளது. இவை அனைத்தும் தலாக் சொன்னதன் பின்னரும் மீள் பரிசீலனை
செய்ய இஸ்லாம் கொடுத்துள்ள சந்தர்ப்பங்களாகும். எனினும் இச்சட்டங்கள்
குறித்த நல்ல தெளிவு மிகப் பெரும்பாலும் சமூகத்தில் காணப்படாதபடியால்
பெரும் குறைபாடுகள், குளறு படிகள் இங்கு நிகழ்கின்றன.
விவாகரத்து
பெரும் பிளவு, கோபதாபம் பகையை ஏற்படுத்தக் கூடாது என்பது இஸ்லாத்தின்
கருத்து. எனவேதான் விவாகரத்து செய்பவர் மதாஉ என அழைக்கப்படும் ஒரு தொகைப்
பணத்தையோ பொருளையோ மனைவிக்குக் கொடுக்க வேண்டுமென அல் குர்ஆன் கூறுகிறது.
ஆனால் எமது சமூகத்தில் விவாகரத்து சுமுகமாக நடப்பதில்லை. பெரும்பகையையும்
முழுமையான உறவு முறிவை யுமே இது ஏற்படுத்துகிறது. பிள்ளைகள் இருந்தால்
அவர்களைத் தந்தை பார்க்கக் கூட அனுமதிக்காத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் மனைவியே இறுதிவரையில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் நிலைமையும்
உள்ளது.
வாரிசுரிமைச் சட்டம் குடும்பக் கட்டுமானத்தைப்
பாதுகாக்கும் ஒரு சட்ட ஒழுங்காகும். ஆனால் எமது சமூகத்தில் அறியாமை காரண
மாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட சட்டமாக அது காணப்படுகிறது.
செலவழித்தல்
கடமைப்படுதல் என்ற சட்டம் குடும்ப கூட்டுப் பொறுப்பை உணர்த்தும் சட்ட
ஒழுங்கு, ஓர் ஆண் யாருக்கெல்லாம் செலவழிக்கக் கடமைப்படுகிறான் என்ற
சட்டத்தை அது விரிவாக விளக்குகிறது. இச்சட்டம் பற்றிய அறிவு சமூகத்தில்
இல்லை எமது முஸ்லிம் தனியார் சட்டம் இது பற்றி எதுவும் சொல்ல வில்லை எனவே
சட்ட ரீதியான எந்த ஒழுங்கும் எமது தனியார் சட்ட நீதிமன்றங்களில் அது
பற்றிக் காணப்படவில்லை.
இவ்வாறு பல உதாரணங்களை இங்கே
முன்வைக்க முடியும். தொழுகை பற்றிய விளக்கத்தில் கவனம் செலுத்துகிறோம்.
ஸகாத் பற்றி பல கூட்டங்கள், மகாநாடுகள், சபைகள், நிறுவனங்கள் என
நடாத்துகிறோம். ஆனால் முஸ்லிம் சமூகத்தின் அடித்தளமாக அமையும் குடும்ப
வாழ்வு பற்றிய அறிவை மக்களுக்கு மத்தியில் மிகப் பரவலாகக் கொண்டுவருவதில்
நாம் ஈடுபாடு காட்டவில்லை.
குடும்பம் சீரமைவதற்கான தீர்வுகள்குடும்ப வாழ்வில் பெண்ணின் பங்கு
குடும்ப
வாழ்வில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி சிந்திக்கும் போது
பெண்ணின் பாத்திரம் பற்றி சிந்தித்தல் முதன்மை யானது. சிறந்த தாயும்,
தந்தையுமே நல்ல சிறந்த சந்ததியினரை உருவாக்குவர். ஆனால் அந்த சிறந்த தாயும்
தந்தையும் உருவாதல் நல்ல கணவன், மனைவி ஊடாகவே சாத்தியமாகும். இப்பின்னணி
யில் குடும்பத்தில் பெண் வகிக்கும் பங்கு அடிப்படையானது. முதன்மையானது. இக்
கருத்தை ஓரளவு விளக்கமாக நோக்குவோம்.
மனைவியாக:
இஸ்லாமிய
பயிற்றுவித்தலின் இலக்கு ஒர் உண்மை முஃமினை, முதிர்ச்சிமிக்க பூமியின்
பிரதிநிதியை பொறுப்புக்களை ஏற்று நடக்கும் நாணயமிக்க பலமான மனிதனை
உருவாக்கலாகும். நம் பிக்கை ஈமானியப் பலம், நான் பூமியின் பிரதிநிதி என்ற
பொறுப் புணர்வு, நாணயம், வேலைகளை மிகச் சரியாக நிறைவேற்றும் ஆற்றல், திறன்
என்ற பண்புகளை உருவாக்கி விடலின் ஊடாகவே இது சாத்தியமாகும். இப்பண்புகள்
சிறுபராயத்திலேயே உருவாக்கப்பட வேண்டும். மனித உணர்வுகள் வடிவமையத் துவங்
கியதன் ஆரம்பகட்டங்களிலேயே இவை ஆக்கப்பட வேண்டும். இது ஒரு சீரான
குடும்பத்தில் பிரச்சினைகள் அற்ற அழகான குடும்ப அமைப்பிலேயே சாத்தியமாகும்.
மனிதக் குழந்தையின் முதல் வளர்ப்பிடம், பாடசாலை, குடும்பமே. மனிதக்
குழந்தை பௌதீக ரீதியாகவோ, மன ரீதியாகவோ தன்னை வளர்த்துக் கொள்ளும் சுய
சக்தியற்றதாகவே பிறக்கிறது. எனவே அது கவனிக்கவும், வளர்க்கப் படவும்
வேண்டும். இப் பின்னணியில் குடும்பம் சீராக அமைதல் மிகவும் அடிப்படையானது.
இவ்வாறு மனிதக் குடும்பம் சீராக அமைதல் மிகவும் அடிப்படையானது. இவ்வாறு
மனிதக் குழந்தையை வளர்த்தெடுக்கும் திறன் அதனிடம் காணப்பட வேண்டும்.
இக்
குடும்பத்தின் ஆரம்ப அங்கத்தவர்கள், அதனை ஆரம்பித்து வைப்பவர்களே கணவன்,
மனைவி எனப்படும் ஆணும், பெண்ணும், குடும்பம் பரஸ்பர அன்பு, இரக்க
மனப்பாங்கின் மீது அமைகிறது. உணர்வுகளின் பரிமாற்றமே அன்பு. பொறுப்புக்களை
சுமத்தும் போது இரக்கம் அடிப்படையாகிறது. கணவனோ, மனை வியோ ஒருவர் மீது
ஒருவர் பொறுப்பைசுமத்தும் போது இந்த இரக்க உணர்வோடு நோக்க வேண்டும்.
இவ்விரு உணர்வுகள் மீதும் எழாத குடும்பம் அர்த்தமற்றதாகிறது. அந்தக்
குடும்பத்தில் வளரும் குழந்தைகளும் சீரான வளர்ச்சியைப் பெறமாட்டார்கள்.
வெறுப் புணர்வோடும், எப்போதும் முரண்பாட்டோடும், சண்டை சச்சரவோடும் வாழும்
ஒரு கணவன் மனைவியருக்கிடையே வாழும் பிள்ளைகள் எவ்வாறு சீராக அமைய முடியும்.
இப்பின்னணியில்
ஆண்,பெண்,கணவன் மனைவி இருவரது நிலையையும் நோக்குவோம். முதலில் பெண்ணை
எடுத்துக் கொள்வோம் குடும்பத்தில் பெண்ணின் பங்கு மிக அடிப்படை யானது.
மனைவி அதன் அத்திவாரம், தலைமை ஆணின் கையில் இருந்தாலும் பெண்ணே
குடும்பத்தில் பிரதான பாத்திரமாக அதனை இயக்குகிறாள் என்ற உண்மையை விளக்கவே
இங்கு முயல்கிறோம்.
மன அமைதியைக் கொடுப்பவளாக
அல்
குர்ஆன் ஆண், பெண் படைப்பமைப்பின் நோக்கமாகவே இக் கருத்தை விளக்குகிறது.
அல்குர்ஆன் கூறுகிறது. “உங்களிலிருந்து உங்களுக்கான ஜோடியைப் படைத்து
அதனிடம் நீங்கள் அமைதி காணுமாறு அமைந்திருப்பது அவனது அத்தாட்சிகளில்
ஒன்றாகும். உங்களிடையே அன்பையும் இரக்கத்தையும் அவன் ஆக்கி யுள்ளான்”
(ஸூரா-ரூம் 21)
ஏனைய அனைத்து உயிரினங்களையும் விட மனித
ஆண்-பெண் இனக்கவர்ச்சி மிகுந்த வீரியம் கொண்டது. ஆண் காம உணர்வு வகையில்
பலவீனமானவன். பெண்ணின் தோற்றம், வெறுமனே அவளைக் கற்பனை செய்வதுவே அவனில்
பாதிப்பை ஏற்படுத்தும். இப்பலவீனமே அவனைப் பெண்ணின் பின்னால் ஓட வைக்கிறது.
பெண்ணின் மென்மை. அவளது பேச்சு, உறவாடல் அனைத்தும் அவனுக்கு மன
அமைதியையும், ஆறுதலையும் கொடுக்கிறது.
ஆண் அவனது தோற்றம்,
பலம் வன்மை என்பவற்றால் உழைக் கவும், போராடவுமே படைக்கப்பட்டுள்ளான்.
உழைத்து, களைத்து, முட்டி, மோதி மனமும், உடலுமே தாக்குண்டு வீடு வரும்
ஆணுக்கு பெண்ணின் குளிர்ச்சியான பார்வையும், மென்மையான பேச்சும்,
ஸ்பரிசமும் அமைதியையும் ஆறுதலையும் கொடுக்கும். வாழ்வின் வெயிலுக்கான நிழலே
பெண். ஆணுக்கு இந்த இடம் தவறும் போதுதான் அவன் மன உளைச்சல் கொண்டவனாகவும்,
வெறுப்பும், விரக்தியும் கொண்டவனாகவும், சில போது வெறி பிடித்தவனாகவும்
மாறிப்போகிறான்.
இவ்வாறு ஓர் ஆணைச் செய்பவளே பெண்தான். அவனை உள
ஆரோக்கியம் கொண்டவனாக வைத்து சமூகத்தின் சிறந்த நற்பயன் தரும் சக்தியாக
வைத்திருப்பது அவளது கையிலேயே உள்ளது. இக் கருத்தை இறைதூதர் (ஸல்)
கீழ்வருமாறு மிகவும் அழகாகச் சொல்கி றார்கள். “யாருக்கு அல்லாஹ் நல்ல
மனைவியைக் கொடுக்கின் றானோ அவனது மார்க்கத்தின் பாதி நிறைவுபெற அல்லாஹ்
உதவி விட்டான் அடுத்த பாதியில் அல்லாஹ்வை அவன் பயந்து நடந்து கொள்ளட்டும்.”
(தபரானி, பைஹகி, ஹாகிம்)
இவ்வாறு பெண் இருக்கவேண்டுமானால்
அவள் தன்னில் உருவாக் கிக் கொள்ள வேண்டிய அம்சங்கலென்ன என்பது பற்றி இங்கு
மிகவும் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டல் அவசியம்.
ஆணின் மனோநிலையைப் புரிந்திருத்தல்
கணவன்,
மனைவி உறவாடல் என்பதன் பொருள் ஒர் ஆணோடு ஒரு பெண் உறவாடுவதாகும். இந்த
உறவாடல் மிகச் சரியாக அமைய வேண்டுமானால் இரு அம்சங்கள் மிக
முக்கியமானதாகும்.
முதலாவது அம்சம் தெரிவு, இருவரும் சில
மணித்தியாலங்களில் முடியும் பிரயாணத் தோழர்களல்ல, ஓரிரு நாட்கள் மட்டும்
உறவாடக்கூடியவர்களல்ல. வாழ்நாள் முழுக்க வாழப்போகும் வாழ்கைத் தோழர்கள்.
இங்கு எந்த நிர்ப்பந்தமும் ஆணோ, பெண்ணோ எத்தரப்பார் மீதும்
பிரயோகிக்கப்படக் கூடாது. இருவரதும் ஆன்ம ஒருமைப்பாடு ஆன்ம உடன்பாடு
மிகவும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அத்தோடு பண, அறிவு, சமூகத்தரப்
பொருத்தப்பாடும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
இறைதூதர் (ஸல்) அவர்கள் இப் பின்னணியிற்றான் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.
ஒரு
நபித்தோழர் தான் திருமணம் பேசி இருப்பதாகக் கூறியபோது “நீ அவளைப்
பார்த்தாயா, அவளைப் பார், அப்போது உங்களி டையே ஓர் இணக்கப்பாட்டை உருவாக்க
அது மிகப் பொருத்தமாக அமையும்.” எனக் கூறினார்கள்.
இது
பற்றிய ஹதீஸ்களை திரட்டி நன்கு ஆராயும் போது ஒருவரை ஒருவர் பார்த்தல்
பேசிப்பார்த்தல் என்பவற்றை இவை உணர்த்து கின்றன என நவீன இஸ்லாமிய அறிஞர்கள்
விளக்குகின்றனர். இயல்பாகவே சிலரோடு ஒத்துப்போக முடிவதில்லை. சிலரின்
பேச்சையும், சில நடவடிக்கைகளையும் பார்க்கும்போது வெறுப்புணர்வு தோன்றி
விடுவதுண்டு இந்த மன உடன்பாடு மிகவும் அத்தியவசியமானது.
தொடரும்..............





