ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்குபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இன்று நடைபெற்ற மூன்றாவது இறுதியாட்டத்தில் இலங்கை அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
முன்னதாக இரு அணிகளும் மூன்று இறுதிப் போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் இருந்தன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி
பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி
231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக டேவிட்
வார்னர் 48 ரன்களும், மேத்யு வேட் 49 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில்
மஹரூஃப், ரெங்கனா ஹெராத் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
பின்னர் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் தில்ஷன், சங்ககரா, சண்டிமால்
ஜெயவர்ததனே ஆகிய முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து
விக்கெட்டுகளை இழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தரங்கா-வும்,
திரிமன்னேவும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். எனினும் திரிமன்னே 30
ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கபுகேதராவும், குலசேகராவும்
விக்கெட்டை இழந்தனர்.
மஹரூஃப், தரங்காவுடன் ஜோடி சேர்ந்தது,
இலங்கை அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் 71 ரன்கள் எடுத்திருந்த போது
தரங்கா விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹெராத், மலிங்கா ஆகியோரின்
விக்கெட்டுகள் வீழ்ந்ததால், இலங்கை அணி, 49- தாவது ஓவரில் 215 ரன்களுக்கு
ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்று கோப்பையை கைப்பற்றியது.
ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலியாவின் மெக்கேவும், தொடர் நாயகனாக இலங்கையின் தில்ஷனும் அறிவிக்கப்பட்டனர்.





