இலங்கையிடம் இந்தியா அதிரடி வெற்றி

ஹோபர்ட்: முத்தரப்பு ஒருநாள் தொடரில், இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை அணியை 36.4 ஓவரில் வென்று, இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
ஆயினும் வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்றால் மட்டுமே இந்திய அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, தில்சான் மற்றும் சங்ககாராவின் அபார சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 320 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் 40 ஓவரில் 321 ரன் எடுத்தால் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளலாம் எனக் களமிறங்கிய இந்திய அணி, சீறுக் கொண்டு எழுந்து இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. இறுதியில் 36.4 ஓவரில் 321 ரன் இலக்கை எட்டி வெற்றி பெற்றதோடு, இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இந்திய அணியில் வீராத் கோலி உட்பட சச்சின், சேவாக், கம்பீர் மற்றும் ரெய்னா ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்தியாவிற்கு வெற்றி தேடி தந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு போனஸ் புள்ளிகள் கிடைத்தன. இந்திய அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சதம் அடித்த வீராத் கோலி தேர்வு செய்யப்பட்டார்.