பெண்கள் பேண வேண்டிய நாணம்


“எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோ அப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 760

கடமையான தொழுகையில் கூட நறுமணம் பூசிக் கொண்டு பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்குக் காரணம், அதனால் மற்ற ஆண்களின் பார்வை அங்கு செல்லும் என்பதை விட வேறு என்னவாக இருக்கும்? வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன? வெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர் சுற்றியது தானே!

“எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத் 109)
“ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 3281

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் தன் வேலையைக் காட்டுகிறான். இதை நிதர்சனமாக நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 24:31)

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண் களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:32-35)

தீன்குலப் பெண்களாக நாம் வாழ வேண்டுமானால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம் மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும் அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடிப்பவர்களாகவும், ஜகாத் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டபடி நடக்க வேண்டும். “தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையை விடக் கனமானது எதுவும் இருக்காது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹ்மத் (26245), அபூதாவூத் (4166)

நன்மையும் தீமையும் நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டைத் தாழ்த்தும் பணியில் ஒழுக்கவியலின் பங்கு ஒப்பிட முடியாதது என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது. “மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “இறையச்சமும் நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்?” என கேட்கப்பட்ட போது, “வாயும் பாலுறுப்பும்” என பதிலளித்தார்கள்.